
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலைத் தயாரிக்க பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக நாளைக்குள் பட்டியலைத் தயாரித்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியை தொடரவும், பொருளாதார, சமூகக்காரணங்களால் தடையேதுமின்றி பள்ளிக் கல்வியை நிறைவு செய்வதற்காகவும் அரசு பல்வேறு வகைகளில் மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.
சீருடை தொடங்கி பாட புத்தகங்கள்வரை அரசு கட்டணமின்றி வழங்கி வருகிறது. இது தவிர மாணவர்களுக்குக் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு கல்வி ஊக்கத் தொகையாக (Special Incentive) 10, 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு தலா ரூ.1500/-ம், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு தலா ரூ.2000/- ம், அவர்களின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்டு, அவர்கள் படிப்பை முடிக்கும்பொழுது அத்தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்புவரை கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அதனால் பாதிக்கப்படுகின்ற அவர்தம் குழந்தைகளுடைய பள்ளிக்கல்வி எவ்விதத்திலும் தடைபடாமல் இருக்க கல்வி உதவித் தொகையாக ரூ.75,000/– பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தவிர, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை கல்விகற்கும் மாணவ/மாணவிகள் பள்ளியிலோ அல்லது பள்ளி சார்ந்த செயல்பாடுகளின் பொழுது எதிர்பாராத விபத்தினால் மரணமடைந்தவர்க்கு ரூ.1,00,000/- எனவும், பெரிய காயமடைந்தவருக்கு ரூ.50,000/- எனவும், சிறிய காயங்களுக்கு ரூ.25,000/– எனவும், அம்மாணவனின் குடும்பத்தாருக்கு நிவாரண நிதித் தொகை வழங்கப்படுகிறது.
இப்படி இருக்கையில் உதவித்தொகை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலைத் தயாரிக்க பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
“உதவித் தொகை பெறுவதற்காக நிலுவையில் உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலும், இந்திய தேசிய நிதி கழகத்தால் செயல்படாத வங்கிக் கணக்குகள்குறித்த தரவுகளும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில், நிலுவையில் உள்ள அனைத்து பட்டியலையும் நாளைக்குள் தயாரிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளைச் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு வழங்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட பட்டியலைத் தயாரித்து வழங்கத் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
