Sanjay Singh: “டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, திகார் சிறையில் சித்ரவதை; பிரதமர் மோடி உத்தரவுப்படி நடவடிக்கை” ; ஆம் ஆத்மி எம்.பி. பரபரப்பு புகார்!

Advertisements

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முதலமைச்சர் கெஜ்ரிவால் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் உத்தரவினால் சித்ரவதை செய்யப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் முதல்வர் கெஜ்ரிவாலின் மன உறுதியை உடைக்க முயற்சி நடைபெற்று வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பரபரப்பான புகாரை கூறியிருக்கிறார்.

டெல்லி மதுபான ஊழல் புகார் வழக்கில் கைதான முதல் அமைச்சர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் உத்தரவு காரணமாக டெல்லி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் முதல்வர் கெஜ்ரிவால் சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கிறார்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலையில் கெஜ்ரிவாலின் மன உறுதியை சீர்குலைப்பதற்காக இதுபோன்ற மனித நேயமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வரின் மனைவி மற்றும் பார்வையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதற்கான அவருடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறைச்சாலை விதிமுறைகளின் படி சிறைவாசிகள் பார்வையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதற்கு அனுமதி உள்ளது.

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலை பொருத்தவரை அவருடைய மனைவியை நேருக்கு நேர் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

அவரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும் மன உறுதியை சீர்குலைக்கும் வகையிலும் மனிதாபிமானம் மற்ற இதுபோன்ற செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன.

மிக மோசமான குற்றவாளிகள் கூட சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் டெல்லியில் மூன்று முறை முதல்வர் பதவி வகித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ஜன்னலின் குறுக்கு கண்ணாடி தடுப்பு வழியாகத்தான் அவருடைய மனைவி சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க போராட்டத்தில் இறங்க வேண்டிய நேரம் இது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நான் கேட்டுக் கொள்ள விரும்புவதெல்லாம் “டெல்லி முதல்வரின் உரிமைகளை பறிக்காதீர்கள்.

அரசியல் சட்டத்தின்படி அந்த உரிமைகள் ஜனநாயக ரீதியில் சட்டபூர்வமாக அவருக்கு உறுதி அளிக்கப்பட்டு உள்ளன. ஒரு சர்வாதிகாரி போல் நீங்கள் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம்” என்பதுதான்”.

இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.

ஏற்கனவே டெல்லி மூத்த அமைச்சர் அதிஷி கெஜ்ரிவால் அரசை கவிழ்த்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டியது நினைவு கூரத்தக்கது.

இதற்கிடையில் முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் வருகிற 15 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதன் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்.

முன்னதாக சஞ்சய் சிங் கூறும்போது “முலாகட் ஜங்லா” வழியாக மட்டுமே கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி வழங்கப்படுவதாக கூறி இருந்தார்.

“முலாகட் ஜங்லா” என்பது திகார் சிறைக்குள் இருக்கும் ஒரு அறையில் ஜன்னலில் கண்ணாடி தடுப்புகளுக்கு இடையே கைதியைப் பார்வையாளர்கள் சந்திக்கும் ஓர் இடமாகும்.

வருகிற 15 ஆம் தேதி அன்று கெஜ்ரிவாலை சந்திக்கப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திட்டமிட்டிருந்தார்.

அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் “முலாகட் ஜங்லா”வில் ஒரு சாதாரண பார்வையாளராக மட்டுமே அவரை சந்திக்க முடியும் என்று கூறி இருந்தனர்.

இது மனிதாபிமானமற்ற செயல் என்று அவர் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *