
சேலம்: சேலம் எடப்பாடி அருகே நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குடியிருப்பு வாசிகள் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவணி பேரூர் கீழ்முகம் கிராமம், மல்லிபாளையம் பகுதியில், பொது வழி பாதையை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதை அகற்றிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு அண்மையில் அளிக்கப்பட்ட நிலையில், தீர்பில் சம்பந்தப்பட்ட பொது வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் எடப்பாடி தாசில்தார் வைத்திலிங்கம், துணை தாசில்தார் சிவராஜ், வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்ற முயற்சி செய்தனர்.

இதனை அடுத்து அங்கு திரண்ட குடியிருப்பு வாசிகள் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கண்ணீர் மல்க அழுகையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா தலைமையிலான காவல்துறையினர், குடியிருப்பு வாசிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள், மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


