புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹிமாச்சலபிரதேசம்உள்ளிட்டவடமாநிலங்களில்கடந்தமூன்றுநாட்களாககனமழை பெய்து வருகிறது.மலைப் பிரதேசமான ஹிமாச்சலில், கன மழை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு புனித தலங்கள், சுற்றுலா மையங்களில், 300க்கும் அதிகமானோர் சிக்கி தவிப்பதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கை சவால் நிறைந்ததாக உள்ளது.ஹிமாச்சலின் சிம்லா, சிர்மார், கின்னார் மாவட்டங்களில் மிதமானது முதல் மிக தீவிரமான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.புதுடில்லியில், யமுனை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
ஆற்று நீரின் அளவு நேற்று மதியம் அபாய அளவை தாண்டியது.இதையடுத்து, கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், மூன்று வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் நான்கு பேர் சிக்கி உயிரிழந்தனர்.மேலும், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜுமாகத் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக, இந்தோ – திபெத் எல்லையில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தில் 14, 100 அடி உயர மலை சிகரங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் சிக்கி உள்ள 300க்கும் மேற்பட்ட பயணியரை மீட்க, விமானப் படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலில் கடந்த மாதம் 24ல் துவங்கிய பருவமழையின் கோர தாண்டவத்தால், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் சேதம் அடைந்துள்ளன.இதுவரை, 780 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கக்கூடும் என, கூறப்படுகிறது.அங்கு நேற்று முன்தினம் மாலை முதல் மழை குறைய துவங்கிஉள்ளதை அடுத்து, மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் கனமழை குறைந்து வருவது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.