
கோவை மாநகரில் கடைவீதி, ராமநாதபுரம், சுந்தராபுரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ஆர்எஸ் புரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக தொடந்து புகார்கள் வந்து உள்ளது.கடந்த ஒரு வருடத்தில் 30 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் நகை பறிப்பில் ஈடுபடும் நபர்களை விரைந்து பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தனிப்படைக்கு உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் பேரில் உக்கடம் சரகம் உதவி கமிஷனர் முருகேஷ் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, உமா மற்றும் போலீசார் கார்த்திக், பூபதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நகை பறிப்பில் ஈடுபடும் நபர்களை தீவிரமான தேடி வந்தனர். இதற்காக கோவை மாநகரில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து, 70 க்கும் மேற்பட்ட பஸ்களில் பயணித்து போலீசார் கண்காணித்து வந்தனர். அதில் கைப்பற்றிய அடையாளங்களை வைத்து போலீசார் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்தது 2 பெண்கள் என்பதை உறுதி செய்தனர்.
இந்த நிலையில் டவுன் ஹால் பகுதியில் போலீசார் சாதாரண உடையில் கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 பெண்கள் இளநீர் குடித்து கொண்டு ஒரு பெண்ணின் நகையை பறிக்க முயற்சி செய்தனர்.இதனை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மாநகரில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த முருகேஷ்வரி (36) மற்றும் ராதா (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் அவர்கள் பதுக்கி வைத்து இருந்த 20 பவுன் நகைகளை மீட்டனர்.மேலும் விசாரணையில் அவர்கள் கடந்த ஒரு வருடமாக போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தது எப்படி, அவர்கள் திருட்டில் ஈடுபட்டது வந்தது எப்படி என்பது குறித்து தெரியவந்தது.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதில்,திருட்டில் ஈடுபட்டு வந்த முருகேஷ்வரி, ராதா சகோதரிகள். ராதாவின் கணவர் பிரிந்து சென்றதால் முருகேஷ்வரியின் கணவருடனே ராதாவும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். ஒரே குடும்பமான இருவரும் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்து உள்ளனர். அதிகமாக கேரளாவில் நகைப் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கேரளாவிலும் அவர்கள் மீது 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
கோவைக்கு வரும் இவர்கள் ஒரு மாதம் கோயில், அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் நோட்டமிட்டு வயதானவர்களிடம் நகையை பறித்து வந்து உள்ளனர்.ஒரு மாதம் கழித்து இடத்தை மாற்றி விடுவார்கள். இதனால் ஒரு வருடமாக போலீசார் பிடியில் சிக்காமல் இருந்தனர். மருதமலை கோயில் பகுதியில் இரவு நேரத்தில் பக்தர்களுடன் சேர்ந்து தூங்குவது போல் நடித்து நகை பறித்து வந்து உள்ளனர். பின்னர் பஸ்கள், கூட்டம் கூடும் இடங்களில் அவர்கள் கைவரிசை காட்டி வந்தனர். ஒரு வருடமாக போலீசாரின் பிடியில் சிக்காமல் இருந்ததால் அவர்களை விரைவில் பிடித்து விட வேண்டும் என்பதற்காக காண்காணிப்பை தீவிரப்படுத்தினோம்.கோவை மாநகரில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த இருவரது படத்தையும் கைப்பற்றினோம்.தொடர்ந்து அவர்களை பிடிக்க கடந்த 15 நாட்களில் அதிகாலை முதல் இரவு வரை 80 க்கும் மேற்பட்ட பஸ்களில் பயணித்து கண்காணித்து வந்தோம். அவ்வாறு கண்காணித்து வந்த போது டவுன் ஹால் பஸ் நிறுத்தம் பகுதியில் இளநீர் குடிப்பது போல நடித்து நகை பறிக்கும் போது இருவரும் மாட்டி கொண்டனர்.அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.


