RIP Vijayakanth: விஜயகாந்த் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

Advertisements

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்த் உடல், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திலிருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. விஜயகாந்த் உடலை ஏற்றி வந்த வாகனம், சுமார் 2 மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல ஊர்ந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வந்தடைந்தது. வழிநெடுக சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

நடிகர் விஜயகாந்த் உடலுக்குக் கண்ணீர் மல்கப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் உடலைப் பார்த்ததும் துக்கம் தாங்காமல் பொதுமக்கள் தலையிலும், வாயிலும் வயித்திலும் அடித்துக்கொண்டு கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.

நாளை மாலை இறுதிச்சடங்கு:

விஜயகாந்தின் இறுதி மரியாதை நாளை (29-12-2023) மாலை 4.45 மணிக்குத் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனத் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் 15 நாட்களுக்குக் கட்சியின் கொடி அரைக்கம்பத்திற்கு பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, உள்ளிட்ட முக்கிய அதிமுகாவினர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *