தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தன்னுடைய திருமண ஆடையை அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி இருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
சினிமா பிரபலங்களிடையே காதல் திருமணங்கள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதோ, அதே அளவு விவாகரத்தும் கடந்த சில வருடங்களாக அதிகளவில் நடந்துள்ளன. குறிப்பாகத் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து என்றால் அது சமந்தா – நாக சைதன்யா ஜோடியின் விவாகரத்து தான். அவர்கள் இருவரும் கடந்த 2017- ஆண்டுத் திருமணம் செய்துகொண்டனர். இது காதல் திருமணமாக இருந்தாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன் கோவாவில் பிரம்மாண்டமாகத் திருமணத்தை நடத்தினர்.
சமந்தா – நாக சைதன்யா ஜோடியின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அதில் கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணத்தில் நாக சைதன்யா கோட் சூட் அணிந்திருக்க, சமந்தா வெள்ளை நிற கவுனில் தேவதைபோலக் காட்சியளித்தார். இவர்களது இந்த அழகிய திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்த நிலையில், விவாகரத்துக்கு பின்னரும் தன்னுடைய திருமண ஆடையை நடிகை சமந்தா மீண்டும் பயன்படுத்தி இருக்கும் சம்பவம் இணையத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. சமந்தா தன்னுடைய திருமணத்திற்காக ஆசை ஆசையாக வாங்கி அணிருந்திருந்த வெள்ளை நிற கவுனை தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு டோட்டலாக மாற்றி மறுபடியும் பயன்படுத்தி இருக்கிறார். விருது விழாவுக்கு அந்த மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஆடையை அவர் அணிந்து வந்திருந்தார்.
இதுகுறித்த புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, ஒரு நீண்ட பதிவு ஒன்றையும் போட்டிருக்கிறார். அதில், எனக்குப் பிடித்த இந்தக் கவுனை மறுவடிவமைப்பு செய்து பயன்படுத்தினேன். அதை மீண்டும் அழகாக்கிய கிருஷ் பஜாஜுக்கு நன்றி. பழைய ஆடைகளை மறுவடிவமைப்பு செய்வது மிகவும் நிலையான வாழ்க்கை முறையை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும். என்மீதான உங்கள் அன்புக்கு நன்றியென நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சமந்தா.

