Vijayakanth Passed Away: தந்தையின் மறைவை தாங்கமுடியாமல் கதறி அழுத மகன்கள்!

Advertisements

விஜயகாந்த் மரணமடைந்த நிலையில் அவரின் உடலைப் பார்த்து அவரது மகன்கள் கதறி அழுத புகைப்படம் காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது.

சினிமா மற்றும் அரசியலில் மகத்தான சாதனைகள் படைத்தவர் விஜயகாந்த். நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி மக்கள்மீது அளவு கடந்த பாசம் கொண்ட நல்ல மனிதராகவும் திகழ்ந்ததால் தான் இவருக்கு இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்த கேப்டன் விஜயகாந்த் இன்று காலை 6 மணிக்கு உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார்.

நேற்று நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டு அதற்காகச் சிகிச்சை பெற சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு அங்கு வெண்டிலேட்டர் உதவி உடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மூச்சு விடுவதில் அவருக்குத் தொடர்ந்து சிரமம் இருந்து வந்த நிலையில், இன்று காலைச் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார்.

விஜயகாந்தின் மரணச் செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்த சென்னைக்கு படையெடுத்தவண்ணம் உள்ளனர். விஜயகாந்தின் உடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை மாலை 4.45 மணிக்குத் தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்தின் உடலைப் பார்த்து அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் ஷண்முகப்பாண்டியன் ஆகியோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. மகன்கள்மீது அதீத பாசம் கொண்டவர் என்பதால் விஜயகாந்தின் மறைவை ஏற்க மனமின்றி அவரது மகன்கள் தேம்பி தேம்பி அழுதனர். அவர்களைப் பிரேமலதாவும் அவரது உறவினர்களும் சமாதானப்படுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *