
அக்டோபர் மாதத்திற்குள் வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த அக்டோபர் மாதத்திற்குள் வங்கிகளுக்கிடையேயான கடன் பரிவர்த்தனைகள் மற்றும் மணி மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கான சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை (சிபிடிசி) அறிமுகப்படுத்தும் என்று மத்திய வங்கியின் செயல் இயக்குநர் அஜய் குமார் சவுத்ரி அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் நடைபெற்ற ஜி—20 உச்சி மாநாட்டின்போது பேசிய சவுத்ரி, “இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் சோதனை முயற்சியாக டிஜிட்டல் கரன்சியை ஆர்பிஐ அறிமுகப்படுத்தும்”என்றார். முன்னரே, கடந்த நவம்பர் 2022 இல், டிஜிட்டல் ரூபாய்-மொத்த விற்பனை (e-W) CBDC யின் சோதனை அடிப்படையிலான அறிமுகம், அரசாங்கப் பத்திரங்களில் இரண்டாம் நிலை சந்தைப் பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு வரம்புக்கு உட்பட்ட பயன்பாடுகளுக்காகத் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின்போது, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ல் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பரீட்சார்த்த முறையிலான டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைக்காக 9 வங்கிகளை ரிசர்வ் வங்கி தேர்வு செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, எஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, மற்றும் எச்எஸ்பிசி வங்கி ஆகியவற்றில் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது.
கூடுதலாக, மத்திய வங்கி டிசம்பர் 1, 2022 அன்று CBDC (e-R) இன் சில்லறை பதிப்பின் சோதனை முயற்சியைத் தொங்கியுள்ளது. e-R ஆனது டிஜிட்டல் டோக்கன் வடிவில் உள்ளது. இது காகித நாணயம் மற்றும் நாணயங்களின் அதே மதிப்புகளில் வெளியிடப்படுகிறது. இது வங்கிகள் போன்ற நிதி இடைத்தரகர்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.இந்தப் பரிவர்த்தனையில் பங்கேற்கும் வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் வாலட் மூலம் பயனர்கள் e-R பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். G20 உச்சிமாநாட்டின்போது அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கில் நிதித்துறை சார்பில் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை முயற்சிகளை ஆர்பிஐ காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

