ராஷ்மிகாவின் போலி வீடியோ தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று அண்மையில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவானது இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண்மணியான ஜாரா படேல் என்பவர் கடந்த அக்டோபர் 9-ந்தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஆகும். அதில் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வைத்து போலி வீடியோவை உருவாக்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த போலி வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல் இந்தி நடிகை கத்ரீனாவின் போலி வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த போலி வீடியோக்களை தயாரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு சார்பில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது.