தைவானில் கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர், அவருக்கு பிடித்த உணவு வகையின் பெயரைக் கேட்டவுடன் நினைவு திரும்பியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தைவான் நாட்டின் சிஞ்சு கவுண்டியைச் சேர்ந்தவர் சியு. 18 வயதான இவர், கடந்த ஜூலை மாதம் தனது ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த சியு, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உள் உறுப்புகள் சேதமடைந்த நிலையில், அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், சியு கோமா நிலைக்குச் சென்றார்.
சியுவை கோமா நிலையில் இருந்து மீட்க எல்லா முயற்சிகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இரண்டு மாதங்களுக்கும் மேலாக சியு கோமாவில் இருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சியுவின் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது சகோதரர், “அண்ணா, நான் உங்களுக்கு பிடித்த சிக்கன் ஃபில்லட்டை சாப்பிடப் போகிறேன்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட சில நிமிடங்களில், சியுவின் நாடித் துடிப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து அவர் சுயநினைவும் பெற்றுள்ளார்.
இதையடுத்து சியு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது உயிரைக் காப்பாற்ற போராடிய மருத்துவ குழுவினருக்கு பெரிய கேக் ஒன்றை வழங்கி சியு நன்றி தெரிவித்தார். தனக்கு பிடித்த உணவின் பெயரைக் கேட்டவுடன் சியு கோமாவில் இருந்து மீண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.