தமிழகத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர்..!

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாட்டா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இராணிப்பேட்டைத் தொழிற்பேட்டையில் தோல் பதப்படுத்தல், தோல் பொருட்கள் தயாரித்தல், மருந்து உற்பத்தி, வாகன உதிரிப் பாகங்கள் தயாரித்தல் என ஐந்நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இந்நிலையில் நெமிலி வட்டம் பனப்பாக்கத்தில் 1231 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு டாட்டா நிறுவனம் ஐந்தாண்டுகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைப்பதற்கு 2024ஆம் ஆண்டு புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமானது. அதன்படி இந்தத் தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை டாட்டா நிறுவனம் தொடங்கியது.

ஆலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, டாட்டா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில் ஐயாயிரம் பேருக்கு நேரடியாகவும், பத்தாயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *