நான் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிரள வைத்துள்ளார்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவின் காசா அமைதித் திட்டத்தை சம்மட்டியால் அடித்து நொறுக்கியது போல ஒரே வரியில் நிராகரித்துள்ளார்.
மறுபுறம், சொந்த நாட்டிலேயே பெரும்பான்மையை இழந்து தவித்தாலும், தனது அதிரடி நிலைப்பாட்டிலிருந்து சற்றும் பின்வாங்காமல் அவர் எடுத்துள்ள இந்த முடிவு, சர்வதேச அரசியல் அரங்கில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் நெதன்யாகுவின் பின்னணியில் நடப்பது என்ன? உலக வல்லரசுகளையே அவர் எப்படி எதிர்க்கிறார்? என்பதை விரிவாக பார்க்கலாம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெஞ்சாகு அதிகாரப்பூர்வமாகத் தூக்கி எறிந்துள்ளார். காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு உருவாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகக் கைவிடும் வரை இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து பின்வாங்காது என்றும், இஸ்ரேலியப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து முறியடிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தற்போது ஆரம்பித்த பிரச்சனை அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் பாலத்தீன தனி அரசை அங்கீகரிப்பதாக அறிவித்தது. அதை நெதன்யாகு மிகக் கடுமையாகச் சாடிய நிலையில், இது தொடர்பாக அவர் பேசுகையில், அக்டோபர் 7 2023 அன்று நடந்த கொடூர படுகொலைக்குப் பிறகு பாலத்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு என்னிடம் ஒரு தெளிவான செய்தி உள்ளது,
நீங்கள் பயங்கரவாதத்துக்கு மிகப்பெரிய பரிசை வழங்குகிறீர்கள். ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலத்தீன நாடு உருவாகாது என ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். மேலும், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டு இந்த பயங்கரவாத நாடு உருவாவதை பல ஆண்டுகளாக தடுத்துள்ளதாகவும், மேற்குகரையில் யூத குடியேற்றங்களை இரட்டிப்பாக்குவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2025ஆம் ஆண்டில் தனி மற்றும் சுதந்திரமான பாலத்தீன தேசத்தை நிறுவும் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில், இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ‘நியூயார்க் பிரகடனம்’ எனப்படும் இந்த முன்மொழிவை ஆதரித்தன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உட்பட 10 நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன.
இருப்பினும், இதுகுறித்து பேசிய நெதன்யாகு, ஒருபோதும் பாலத்தீன நாடு உருவாகாது, இந்த இடம் எங்களுடையது என்று திட்டவட்டமாகத் குறிப்பிட்டிருந்தார்.சர்வதேச அளவில் இவ்வளவு கடுமையான பிடிவாதத்தைக் காட்டும் நெதன்யாகுவின் சொந்த நாட்டு அரசியல் நிலை என்ன தெரியுமா? சமீபத்தில் நடைபெற்ற இஸ்ரேல் தேர்தல்களில் நெதன்யாஹுவிற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உள்நாட்டில் கடுமையான அரசியல் அழுத்தங்களையும், தேர்தல் சவால்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
இருப்பினும், தன் மீதான அரசியல் நெருக்கடிகளையும் தாண்டி, தனது தீவிர வலதுசாரி கொள்கைகளிலிருந்து அவர் கொஞ்சமும் பின்வாங்கவில்லை என்பதுதான் தற்போதைய அரசியல் நிலவரம். உள்நாட்டில் தேர்தல் தோல்விகள் மற்றும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டாலும், அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் நெதன்யாகு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு மத்திய கிழக்கு அரசியலை அடுத்த கட்ட மோதலுக்கு நகர்த்தியுள்ளது.
இது அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது உலகப் போருக்கான விதையை விதைக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.



