
தில்லியிலும், அதையொட்டிய உத்தரப்பிரதேச, அரியானா மாநிலப் பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளது. ஐடிஓ அருகில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்ததால் அதில் நீந்தியபடி வாகனங்கள் மெதுவாகச் சென்றன. காலைப் பொழுதிலும் மழை பெய்துகொண்டு வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.
முனீர்க்கா மெட்ரோ நிலையம் அருகே தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. தில்லி ஏபிஎஸ் குடியிருப்பு அருகே மெட்ரோ பாதைக்குக் கீழே கால்வாய் போல் மழைநீர் பாய்ந்தது. மோதிபாக் மேம்பாலத்தின் கீழ் குளம்போல் தேங்கிய நீரில் தத்தளித்தபடி வாகனங்கள் மெதுவாகச் சென்றன.
கனமழையால் தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாகச் சென்றன.தில்லியில் பெய்த கனமழையால் பஞ்சாபி பாக் மேம்பாலத்தின் கீழுள்ள அணுகுசாலையில் குளம்போல் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. கனமழையின் காரணமாகத் தில்லி மாதங்கிர் பகுதியிலும் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.
பாரத மண்டபம் அருகே சுரங்கப்பாதைக்குள் புகுந்த மழைநீரை மோட்டார் உதவியுடன் இறைத்து வெளியேற்றி வருகின்றனர். தில்லியை ஒட்டிய புறநகர்ப் பகுதியான உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரிலும் கனமழை பெய்தது. இதனால் காலையில் சாலையில் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் குறைவாகவே காணப்பட்டது.


