புதுடெல்லி:
அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வக்ஃப் சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2ம் தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 26 தொடங்கி நடைபெற்று வருகிறது, டிச.20ஆம் தேதிவரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அழைப்பு விடுத்து வருகின்றனா். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த இரு நாட்களாக இரு அவைகளும் முடங்கின.
அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். பின்னர் மாநிலங்களவை டிச.2ம் தேதி காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம்குறித்து கேள்வி எழுப்பி, தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று பிற்பகல் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.