Rajnath Singh: இங்கிலாந்து பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

லண்டன்: இங்கிலாந்து பிரதமருடன் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து கலந்துரையாடினார்.ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 22 ஆண்டுகளில் இந்திய ராணுவ அமைச்சர் ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாகக் கடந்தாண்டு ஜூன் மாதம் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்லத் திட்டமிட்ட நிலையில், நெறிமுறை காரணங்களுக்காக இந்திய தரப்பால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 8ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

இந்தப் பயணத்தின்போது இங்கிலாந்து ராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இங்கிலாந்து வெளியுறவு செயலர் டேவிட் கேமரூனுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தனது லண்டன் பயணத்தின்போது, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை ராஜ்நாத் சிங் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்குறித்து ஆலோசனை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *