
புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால், அவரது குரு அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர், மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் மே 25ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பிரசாரம் களை கட்டியுள்ளது. டில்லியில் துவாரகா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வாக்குறுதிகளை ஆம் ஆத்மி ஒருபோதும் நிறைவேற்றவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாத, டில்லி அரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்க தகுதியில்லை. கெஜ்ரிவால், அவரது குருவான அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?.
பெரிய மஹால்
குருவின் பேச்சை மீறிப் புதிய அரசியல் கட்சியைக் கெஜ்ரிவால் உருவாக்கினார். டில்லியை லண்டனைப் போல மாற்றுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் சொன்னார்கள். நம் நாடு இப்போது லண்டனை விட மிகவும் முன்னேறி உள்ளது. யமுனை நதியைச் சுத்தப்படுத்துவதாக ஆம்ஆத்மி கட்சியினர் உறுதியளித்தனர். ஆனால் யமுனை நதியைச் சுத்தம் செய்தார்களா?. கெஜ்ரிவால் முதல்வர் இல்லத்தில் வசிக்கமாட்டேன் என்று உறுதியளித்தார். இருப்பினும், அவர் தனக்காகப் பெரிய மஹால் கட்டினார்.
பி ‘டீம்’
ஆம்ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தச் சம்பவம்குறித்து ஏதும் பேசாமல் கெஜ்ரிவால் அமைதியாக இருந்தார். நீண்ட நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. காங்கிரசின் பி ‘டீம்’ ஆக ஆம் ஆத்மி செயல்படுகிறது. அயோத்தியில் ராமர் கூடாரத்திலிருந்து அரண்மனைக்குச் சென்றுள்ளார். பாரதம் நிச்சயமாக ‘ராம ராஜ்ஜியம்’ எழுச்சியை பெறும். இதனை உலகில் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


