Rajisha Vijayan: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்!

தமிழில் தனுஷுடன் கர்ணன், சூர்யாவின் ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை ரெஜிஷா விஜயனின் ரகசிய காதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து கலக்கிய நடிகைகள் ஏராளம். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கேரளாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்தது தமிழ் சினிமா தான். அந்த வரிசையில் அண்மையில் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரெஜிஷா விஜயன்.

இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ரெஜிஷா, முதல் படத்திலேயே தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தார். இதையடுத்து சூர்யா உடன் ஜெய் பீம் படத்தில் நடித்த ரெஜிஷா, அப்படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருந்தார். இதன்பின்னர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி தமிழில் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்து பிரபலமான ரெஜிஷா விஜயன், தற்போது டாப் பார்மில் இருக்கும்போதே திருமணத்துக்கு தயாராகி வருகிறார். அவர் மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருகிறார். ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி தாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சூசகமாக தங்கள் காதலை உறுதி செய்துள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த மலையாள நடிகைகளும், ரெஜிஷாவின் தோழிகளுமான அஹானா கிருஷ்ணா, மமிதா பைஜூ ஆகியோர் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். இதன்மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகி உள்ளது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளதாம். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *