Kerala : களைக்கட்டும் தேர்தல் மையம்.. நாளை நடைபெறும் வாக்குப்பதிவு..!

Advertisements

கேரளாவில் நாளை 9-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. 2016, 2021-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான எல்டிஎஃப்  என்கிற இடதுசாரி ஜனநாயக முன்னணி  கூட்டணி பெருவாரியான இடத்தைப் பிடித்து ஆட்சியைப் பிடித்தது.

தொடர்ந்து 2 முறையும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் பினராயி விஜயனே முதலமைச்சராக  தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலிலும் மார்க்ஸிஸ்ட் தலைமையிலான கூட்டணியே ஹாட்ரிக் வெற்றி பெறுமா  என்று கேரள மக்கள் மட்டுமல்ல, கேரளாவுக்கு வெளியில் இருக்கிற கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் இருக்காங்க.. ஏன்னா… கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸும், கம்யூனிஸ்டும்தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

ஆனால் , 2016ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. அதன்பிறகு 2021ம் ஆண்டு  நடந்த தேர்தலில் வழக்கமான  கேரளா பாணியில் காங்கிரஸ் தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத நிலையில் மார்க்ஸிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரி முன்னணியே ஆட்சி அமைத்தது.

அதுமட்டுமல்ல, பினராயி விஜயனே மறுபடியும்  முதலமைச்சராக பொறுப்பேற்றார். 82 வயதான இவர் கடந்த 60 ஆண்டுகளாக இடது சாரி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். கேரள வேட்பாளர்களிலேயே  பினராயி விஜயன் தான் மூத்தவராக உள்ளார். மக்கள் பணி செய்ய வயது எல்லாம் ஒரு தடையில்லை என்று தொடர்ந்து அரசியல் பணி செய்து வருகிறார்  பினராயி விஜயன்.

இப்படியான நிலையில்தான், இந்த தேர்தலிலும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி முன்னணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று உறுதியாக கேரளாவில் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால்,  கடந்த 10 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் ஏராளமான நலத்திட்டங்களை அமல்படுத்தியதால் மக்களின் ஆதரவு பெருவாரியாக முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கிடைத்துள்ளது.

அமைதியாக மாநிலத்தின் முன்னேற்ற பணிகளை மட்டும் அவர் கவனம் செலுத்தி வருவதால் கேரள மக்களிடையே ஏகோபித்த ஆதரவு உள்ளதாக பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக இருந்து வந்தது.  இந்நிலையில் 2004 மக்களவைத் தேர்தலில் 59 இடங்களில் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் வெற்றி பெற்றனர்.

இதேுபோல், 2009 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 25 இடங்களையும்,  2014-ல் நடந்த ம க்களவைத் தேர்தலில்  11 இடங்களையும், 2019-ல் 5 இடங்களையும், 2024-ல் 8 இடங்களையும் இடதுசாரிக் கட்சிகள் வென்றன.இந்திய விடுதலைக்குப் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில்  பெருவாரியாக வெற்றி பெற்ற  இடது சாரிகள் எதிர்க்கட்சி வரிசையில்  ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களை கேள்விகளால் திணறடித்தனர்.

ஆனால் இன்று தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை மோசமடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  மிக வேகமாக சரிந்து வந்தாலும்,  கேரளாவில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான எல்டிஎஃப்-புக்கு ஆதரவு அமோகமாகவே உள்ளது. அதேநேரம்,  ஒவ்வொரு முறையும் கேரள சட்டப் பேரவைத் தேர்தல் இடதுசாரிகளுக்கு ஒரு வாழ்வா சாவா என்று பார்க்கப்படுவதாகவும்  அரசியல் விமர்சர்கள் சொல்லி வருகின்றனர்.

ஒருவேளை,   இந்தத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் தோல்வி கண்டால், தேசிய அளவில் எந்த ஒரு மாநிலத்திலும் இடதுசாரிகளின் அரசே இல்லை என்ற துர்பாக்கிய நிலை உருவாகிவிடும்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால் இடதுசாரி கட்சிகளுக்கு ஒரு முழுமையான அழிவை குறிக்காது என்றபோதிலும், இது நிச்சயமாக தேசிய அளவில் ஒரு பெரிய அடியாக அக்கட்சிகளுக்கு இருக்கும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

ஏனெனில் இது நாடு முழுவதும் இடதுசாரிகளுக்கு ஒரு மாநில அரசே இல்லாத நிலையை உருவாக்கி, விடுதலைக்காக எண்ணற்ற தியாகத் தழும்புகளைப் பெற்ற கம்யூனிஸ்டுகள் கேலிக் குரியவர்களாக மாற்றப்படுவார்கள்.
கேரளாவைச் சேர்ந்த பாஜகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் ஒரே குரலில் சொல்வது இதுதான், கேரள சட்டமன்ற தேர்தல் கம்யூனிஸ்டுகளின் அரசியல் சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணி என்று விமர்சித்து வருகின்றனர்.

உலகளவில் பல்வேறு நாடுகளில் அதிரடி புரட்சிகள் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள், முதன்முதலாக 1957 ம் ஆண்டு வாக்குச் சீட்டு மூலம் ஜனநாயக முறைப்படி ஆட்சியை  பிடித்தது கேரளாவில் தான்.
தேசிய அளவில் மூழ்கிக்கொண்டிருப்பதாக சொல்லப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற கப்பலை ‘கடவுளின் சொந்த தேசம்’ என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்து.

எது எப்படி இருந்தாலும், 2026 கேரள சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இடதுசாரிகள் தொடர்ந்து தேசிய அரசியலில் பயணிக்க முடியுமா அல்லது மூழ்கிவிடுமா என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *