தமிழகத்தில் ஜனவரி 2 ஆம் தேதி வரை மழை!

Advertisements

சென்னை:

தமிழகத்தில் ஜனவரி 2ஆம் தேதிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மார்கழி மாதத்தால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தெற்கு கேரள கடலோரப் பகுதி மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது கிழக்கு திசை காற்றை தமிழக நிலப்பரப்பு வழியாக ஈர்க்கும் என்பதால் டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 80 மி.மீ.மழை பெய்துள்ளது. பெரம்பூர், பேசின்பிரிட்ஜ், அண்ணாநகர் மேற்கு, பள்ளிப்பட்டு, கோடநாடு ஆகிய பகுதிகளில் தலா 60 மி.மீ. மழையும் கொளத்தூர், தண்டையார்பேட்டையில் தலா 50 மி.மீ. மழையும் பதிவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

28-12-2024 முதல் 30-12-2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 31-12-2024 மற்றும் 01-01-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் உறைபனி இருக்கும். வறண்ட வானிலை, வறண்ட வடக்கு காற்று ஊடுருவல் நிகழும்போது, வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படும்.

அதன்படி இந்த நிகழ்வு ஜனவரி 3-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஏற்படக்கூடும். எனவே 10-ந்தேதி அல்லது அதன் பிறகு வடகிழக்கு பருவமழை விடை பெற்றதாக அறிவிக்கப்படும்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 3 நாட்களில் அது மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு, குளிர், வெயில், மழையென வானிலை மாறி மாறிக் காணப்படும்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *