
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க கோரி, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி சட்டப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சி வீதியில் இறங்கி பேரணி நடத்த புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தொடர்ந்து 15 நாட்களுக்கு இந்த பேரணியை நடத்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது குறித்து விவரிக்கிறது.
இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்து அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை யுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக உமர் அப்துல்லா இருந்து வருகிறார். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் பெற்று தருவதில் உறுதியாக உள்ளதாக கூறிய தேசிய மாநாட்டு கட்சி அதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதுபோக ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் தேசிய மாநாட்டு கட்சி இறங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி வேறு ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் எனக் கோரி தொடர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. தொடர்ந்து 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து பேரணியில் ஈடுபடுவோம் என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தரியா ஹமீது கர்ரா கூறியுள்ளார்.
இந்த பேரணி என்பது அமைதியான முறையிலும் எனவும் தனித்துவமான போராட்டமாகவும் இருக்கும் என்றும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதை இந்திய பிரதமர் பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி அமையும் என்று தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தியும் இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக உள்ள உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெறுவது குறித்து வெளிப்படையாகவே வலியுறுத்தினார். இந்திய பிரதம நரேந்திர மோடி இது குறித்து நேரடியாக பதில் எதுவும் அளிக்காமல் உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று மட்டும் கூறினர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரியும் மாநில அந்தஸ்து கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தேசிய மாநாட்டு கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேவேளையில் காங்கிரஸ் கட்சி வீதியில் இறங்கி மக்களிடம் கோரிக்கையை முன்வைத்து போராட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் கட்சியை வலுபடுத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் பாஜக 29 இடங்களிலும் வெற்றி எதிர் கட்சியாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப்போன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார். மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவதும், யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் முழு அதிகாரம் மத்திய அரசிடமே உள்ள நிலையில் இந்தியாவில் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வேலை மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தால் ஜம்மு காஷ்மீருக்கும், புதுச்சேரிக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
