
சென்னை:
தமிழீழ விடுதலைப் புலிகள் பிரபாகரனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தது வெறும் 12 நிமிடங்கள்தான்; இதனை அம்பலப்படுத்திய பின்னரும் கூச்சமே இல்லாமல் துணிச்சலாகப் பொய்யான புது புது கதைகளைத் தொடர்ந்து பேசி வருகிறார் சீமான்.
பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்துக் கொண்டிருக்கிறார் சீமான் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரபாகரனை சீமான் சந்தித்தது 12 நிமிடங்கள்தான். இதை 7,8 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறேன். விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் சீமான் செய்கிற பெரிய துரோகமே, புலிகள் ஆதரவு களத்தில் இருப்பவர்கள் அனைவரையுமே துரோகிகள், தெலுங்கர்கள் எனப் பேசிக் கொண்டிருப்பதுதான்.
விடுதலைப் புலிகள் ஆதரவு களத்துக்கு வேறு யாரும் வரக் கூடாது; தான் மட்டுமே தலைவராக ஒற்றை மனிதராக நிற்க வேண்டும் என்பதையும் சீமான் செய்து கொண்டே வந்துள்ளார்.
விடுதலைப் புலிகள், கொழும்பு கட்டுநாயக்க விமான படை தளம்மீது தாக்குதல் நடத்தியது மிகப் பெரிய தாக்குதல். உலகமே அப்போது வியந்து பார்த்தது. ஒரு விடுதலைப் படை விமானம் வைத்திருக்கிறது.
அது ரேடார் கண்களுக்குப் படாமல் பொதுமக்களுக்கு உயிர் சேதம் இல்லாமல் அத்தனை விமானங்களையும் அழித்துவிட்டு பாதுகாப்பாகத் திரும்பினர் என்பதால் உலகமே வியந்து பார்த்தது.
இந்தச் செய்தியை நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஏடுகள் எட்டுகால செய்தியாகவே வெளியிட்டன. ஆனால் சீமான்தான், உலகத்துக்கே விடுதலைப் புலிகள் இயக்கத்தை அறிமுகப்படுத்தியது போலப் பேசி வருகிறார்.
1980களில் சென்னையிலிருந்து பாலசிங்கம், சந்திரஹாசன் நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன; சென்னையில் மட்டும் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
டெசோ மாநாட்டில் இந்திய தலைவர்கள் அனைவரையும் அழைத்து வந்து பேச வைத்தது போன்றவை எல்லாம் சாதாரண எழுச்சியா? அப்போது எல்லாம் விடுதலைப் புலிகளை யாருக்கும் தெரிந்திருக்காதா?
துணிச்சலாகச் சீமான் பொய் சொல்வதை பைத்தியக்காரன் உளறல் எனக் கடந்து சென்றதுதான் தவறு… 12 நிமிடம்தான் பிரபாகரனை சீமான் சந்தித்தாரெனச் சொன்னபிறகும் கூடப் புது புது கதைகளையே சொல்லிக்கொண்டிருந்தார்.
பொய்யை மட்டுமே மூலதமான வைத்துப் பேசுவது என முடிவெடுத்தவர்களுக்கு கூச்சம் எல்லாம் எதுவும் இருக்காது. பாஜகவினரைப் போலவே நாம் தமிழர் கட்சியினரும் துணிந்தே பொய் சொல்கின்றனர்.
