
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல் மே 20 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு மிக முக்கிய அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவின் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் மூலோபாயக் கூட்டாண்மையை உலக அளவில் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகும். தனது பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அவர், அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் பிரதமர்களைச் சந்திக்கும் பிரதமர், பின்னர் நார்வேயில் நடைபெறும் 3-ஆவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் தற்போதையச் சூழலில், பிரதமரின் இந்தப் பயணம் சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


