
வயநாடு :பெரும் முதலாளிகளின் கருவியாகப் பிரதமர் மோடி செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதும் அவர் தாக்குதல் தொடுத்தார.
மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி, இரண்டாவது நாளாக சாலைப் பேரணியில் ஈடுபட்டு அப்பகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த பேரணியின் போது மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:-
“ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் இந்திய அரசியலமைப்பை அழித்து புதிதாக உருவாக்க முயற்சிக்கிறார்கள். காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் அரசியலமைப்பை பாதுகாக்க போராடி வருகிறது.
இந்தியாவின் மிகப் பெரும் 5 அல்லது 6 முதலாளிகளின் கருவியாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதே அவரின் இலக்காக உள்ளது.
கடலுக்கு அடியில் பூஜை
அதனால்தான் கடலுக்கு அடியில் பூஜை நடத்துகிறார். ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவோம் என்றும், நிலவுக்கு மனிதரை அனுப்புவோம் என்றும் கூறுகிறார்.
வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பேசுவதில்லை. நாட்டின் பணக்காரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்கிறார்.
மோடியின் கண்களில் தெரிவது என்ன?
நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியை நீங்கள் பார்த்தீர்களா எனத் தெரியவில்லை. அவரது முகத்திலும், கண்களிலும், இந்திய பணக்காரர்களை மிரட்டி ஆயிரக்கணக்கான கோடிகளை பாஜக பெற்ற மிகப்பெரிய ஊழலை மறைக்க முயற்சித்தது தெரிந்தது.”இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்
வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் ஆனி ராஜாவும், பாஜக வேட்பாளராக மாநிலத் தலைவர் சுரேந்தரும் போட்டியிடுகின்றனர்.
பினராயி விஜயன்
மற்றொரு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விட்டுவிட்டு தனக்கு எதிராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டுவதாகவும் தாக்குதல் தொடுத்தார்.
“பாஜக அரசியல் சாசனத்தை சீர்குலைத்து வருகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுத்து நாட்டை பிளவு படுத்துகிறது. இது பற்றி பேசாத கேரளா முதல்வர் எனக்கு எதிராக தாக்குதல் தொடுப்பது ஏன்?.
எனக்கு எதிராக மோடி அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகிய இரு முதல்வர்கள் சிறையில் உள்ளனர். அதே நேரத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன் என்பது வியப்பை அளிக்கிறது”.
இவ்வாறு ராகுல் கூறினார்.



