நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!
புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழை நீர் வெளியேற முடியாமல் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் காலை முதலே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சுமார் 16 மில்லி மீட்டர் மழை பெய்துள்ள நிலையில் நகர பகுதி முழுவதும் வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. இதேபோன்று கிராமப் புறங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பாகூர் வழியே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பணி முழுமை அடையாததால் மழை நீர் வடிவதற்கும் வழி இல்லாமல் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் பாகூர், அரங்கனூர், சோரியாங் குப்பம், சேலியமேடு, கரிக்கலாம்பாக்கம், பின்னாச்சி குப்பம், கன்னி கோயில், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிக அளவு விவசாய நிலங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடித்து மழை நீர் தேங்காமல் வெளியேற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.