
புதுச்சேரியில் நடுக்கடலில் மாணவி ஆர்த்திக்கு நீதி வேண்டும் என்ற பேனரை படகில் கட்டி போராட்டம் நடத்திய மாணவர்கள் கடலில் இறங்கி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
புதுவையில் 9 வயது சிறுமி கொலைக்குக் காரணமான போதைப்பொருளை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் இன்று நடக்கிறது. பந்த் போராட்டம் அறிவித்த இண்டியா கூட்டணி கட்சியினர் காலை 10 மணியளவில் காமராஜர் சிலை சந்திப்பில் திரண்டனர். அங்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர். சிலர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட மாணவி ஆர்த்திக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்திப் புதுச்சேரி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.மேலும் பல்வேறு இடங்களிலும் அரசியல் கட்சிகள் சமூக நல இயக்கங்கள் போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஆர்த்திக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்திக் காந்தி சிலை பின்பு உள்ள நடுக்கடலில் இரண்டு படகுகளில் பேனர்களை கட்டிய மாணவர்கள் நடுக்கடலில் இறங்கி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய மாணவர்களைக் கரைக்கு அழைத்து வந்தனர். இதனால் கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

