Liquor Policy Violation Case :கெஜ்ரிவாலுக்கு செப்டம்பர் 3-ந்தேதி வரை நீதிமன்ற காவல்!

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு செப்டம்பர் 3-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ந்தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிப்பதற்கான வாதங்கள் கோர்ட்டில் தற்போது நடந்து வருகின்றன. இதனிடையே கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், அவர் சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *