
திருவனந்தபுரம்:
கேரளாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில், முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும் திட்டத்தைச் சில பள்ளிகள் செயல்படுத்தின.
செனாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தங்களுக்கு பிடித்தவர்களைத் தேர்வு செய்து வாழ்த்து அட்டைகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு வரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பினர். இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்புப் படிப்பவர் ஸ்ரேயா சபின்.
ஆரம்மைல் பகுதியைச் சேர்ந்த சபின்-அஞ்சலி தம்பதியினரின் மகளான இவர், வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்திக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வாழ்த்து அட்டை அனுப்பினார்.
அதன்பிறகு அவர் அதனை மறந்து விட்டார். இந்த நிலையில் 2 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரேயா பெயருக்கு அவர் படிக்கும் பள்ளிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தைப் பிரியங்கா காந்தி எம்.பி. தனது கைப்பட எழுதி அனுப்பி இருந்தார்.
ஸ்ரேயா, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதில் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிஜூ, அந்தக் கடிதத்தை மாணவ-மாணவிகள் மத்தியில் ஸ்ரேயாவிடம் ஒப்படைத்தார். மாணவியின் வாழ்த்துக் கடிதத்துக்கு மதிப்பு அளித்துப் பிரியங்கா காந்தி பதில் கடிதம் அனுப்பிய சம்பவம் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பலரை நெகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
