நாட்டின் சொத்துக்களை மத்திய பாஜக அரசு தனியாருக்கு கொடுக்கிறது – பிரியங்கா காந்தி…
சத்தீஷ்கார் மாநிலத்தில் நடத்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 7) நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்கவைக்க அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சத்தீஷ்காரின் பலொட் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது, ‘கடந்த 5 ஆண்டுகளாக சத்தீஷ்காரில் காங்கிரஸ் அரசு மக்கள் நலனுக்காக உழைத்தது. ஆனால், மத்திய அரசு என்ன செய்தது? தலா 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 விமானங்கள் பிரதமர் மோடிக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வரும்போது நான் உத்தரபிரதேசத்தில் இருந்தேன். அங்கு கரும்பு விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்படவேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகைக்காக தெருவில் போராடிக்கொண்டிருந்தனர். 70 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று எங்களை (காங்கிரசை) பாஜக தாக்கி பேசுகிறது. ஆனால், காங்கிரசால் கடந்த 70 ஆண்டுகளாக செய்யப்பட்ட நல்லவிஷயங்களை மத்திய பாஜக அரசு அழித்துவிடுகிறது அல்லது நாட்டின் சொத்துக்களை பெரிய தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடுகிறது’ என்றார்.