முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை: வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார், இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக குணமடைவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பருவமழை காரணமாக பலருக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சளி, இருமல் என உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், முதலமைச்சருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டது.
தனியார் மருத்துவமனை தரப்பில் இது தொடர்பான செய்திகுறிப்பும் வெளியிடபட்டது. அதில் முதலமைச்சருக்கு தொடருந்து காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் மருத்துவமனை விளக்கமளித்திருந்தது. அதன்படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 தினங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், முதல்வருக்கு பருவமழை காரணமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் முழுமையாக குணமடைந்து அவர் பணிகளை தொடர்வார் எனவும் தெரிவித்துள்ளார்.