
வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் இலக்கை எட்டுவதற்கு விரைவான சீர்திருத்தங்கள் தேவை எனத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் தேவை என்று கேட்டுக்கொண்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வெளியே உரையாற்றினார்.
அப்போது, 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் இலக்கை அடைய அடுத்துவரும் காலக்கட்டம் முக்கியமானது என்று தெரிவித்தார். தொடர்ந்து ஒன்பது முறை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர், பெண் நிதியமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வணிகத்துக்குச் செய்துகொண்ட உடன்பாடு தற்சார்பு இந்தியா, தன்னிறைவு இந்தியா ஆகிய இலக்குகளை அடைய உதவும் என்றும் தெரிவித்தார். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பதே தமது அரசின் அடையாளமாக உள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தச் சீர்திருத்த ரயில் வேகம்பெறுவதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேர்மறையான பங்களிப்புகள் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசின் திட்டங்களைக் கோப்புகளில் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்விலும் கொண்டுவரத் தமது அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

