
மரபுவழி மருத்துவத்தில் ஒன்றான யோகாசனம், நலம், சமநிலை, நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கி உலகம் பயணிக்கும் பாதையைக் காட்டுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் சார்பில் மரபுவழி மருத்துவம் குறித்த இரண்டாவது மாநாட்டின் நிறைவு விழா தில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் தெத்ரோஸ் அதனாம் கீப்ரயீசஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.அப்போது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
பிரதமர் மோடியும் தெத்ரோஸ் அதனாம் கீப்ரயீசசும் இணைந்து, தில்லியில் அமைக்கப்பட்டுள்ள உலக நலவாழ்வு அமைப்பின் தென்கிழக்காசிய மண்டல அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.யோகாசனத்தின் பெருமையை உலகளவில் பரப்பி அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
யோகாசனப் பயிற்சி குறித்த உலக நலவாழ்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப அறிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்திய மரபுவழி மருத்துவங்கள் அடங்கிய ஆயுஷ் அமைச்சகத்தின் பதினோராண்டுக்கால வளர்ச்சி குறித்த புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.தரமான ஆயுஷ் மருத்துவத் தயாரிப்புகள், சேவைகள் ஆகியவற்றுக்கான மை ஆயுஷ் ஒருங்கிணைந்த சேவைகள் தளத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மூன்று நாட்களாக மரபுவழி மருத்துவம் குறித்து உலகெங்கும் இருந்து வந்துள்ள வல்லுநர்கள் கூடிப் பொருள் பொதிந்த விவாதங்களை நடத்தியதாகக் குறிப்பிட்டார். மரபுவழி மருத்துவத்துக்கான உலகளாவிய மையத்தைக் குஜராத்தின் ஜாம்நகரில் நிறுவியுள்ளது இந்தியாவின் பெருமை என்று பிரதமர் தெரிவித்தார்.
மரபுவழி மருத்துவத்துக்கான முதல் மாநாடு இந்தியாவில் நடைபெற்றது இந்தியாவின் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.மரபுவழி மருத்துவத்தில் யோகாசனமும் அடங்கும் என்றும், நலம், சமநிலை, நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கி உலகம் பயணிக்கும் பாதையை அது காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
உலக யோகா நாளாக ஜூன் 21ஆம் நாளை ஐக்கிய நாடுகள் அவை அறிவிக்க ஆதரவளித்த 175க்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். யோகாசனத்தை உலக அளவில் பரப்புவதற்குப் பங்களித்த ஒவ்வொருவரையும் தான் பாராட்டுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

