
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனையொட்டி, இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகை தருகிறார்.
இதில், நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நெல்லை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் கொண்டுள்ளது.




