
தலைமறைவான பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரைத் தேடும் பணி தீவிரம்!
மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரணவ் ஜுவல்லரி குறுகிய காலத்திலேயே மதுரை, கும்பகோணம், கோவை, ஈரோடு, சென்னையெனப் பல இடங்களைக் கிளைகளைத் தொடங்கியது. 5 லட்சம் முதலீடு செய்தால் 2% வட்டி., 10 மாதங்களுக்குப் பிறகு செய்கூலி சேதாரமின்றி 106 கிராம் நகை பெறலாமெனப் பல அதிரடி விளம்பரங்களைச் செய்தது.
மேலும் பழைய நகைகளைக் கொடுத்தால், ஒரு வருடம் கழித்து செய்கூலி, சேதாரமின்றி பழைய நகைகளின் எடைக்குச் சமமாகப் புதிய நகைகளைப் பெறலாம் என்றும் விளம்பரம் செய்தது. இதனால் பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளிலும் பணத்தை முதலீடு செய்தனர். மேலும் பழைய நகைகளைக் கொடுத்து, ஒரு வருடம் கழித்து புதிய நகைகளை வாங்கலாம் என்று ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தனது நகைகளை அடுத்தடுத்து மூடியது. திருச்சியில் உள்ள தனது நகைக்கடையையும் மூடியது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மதுரை, திருச்சி, சென்னையெனப் பல இடங்களில் பிரணவ் ஜுவல்லரிக்கு எதிராக மோசடி புகார் அளித்துள்ளனர். திடீரென நகைக்கடையை மூடித் தலைமறைவான கடை உரிமையாளர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள்மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.


