Karur Stampede : பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

கரூர்க் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஒருவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கரூர்க் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர், கருணை அடிப்படையில் பணி வழங்கினால் கரூர் வழக்கில் சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பாக அது அமையும் என்று தெரிவித்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, தருமபுரி பேருந்து எரிப்பு ஆகியவற்றில் இறந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு தராததையும், அரசுப் பணி வழங்காததையும் சுட்டிக்காட்டினார்.

வாதங்கள் நிறைவடைந்தபின் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமனத்துக்கான ஆணை வழங்கத் தடையில்லை எனத் தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்தப் பணி நியமனம் தற்காலிகமானதுதான் என்றும், இது நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்குக் கட்டுப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை எதிர்மனுதாரராகச் சேர்த்ததுடன், வழக்கின் விசாரணையை ஜூலை 21ஆம் நாளுக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *