
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த வாரம் காலமானார். அவரது உடலுக்குச் சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடந்த நிலையில், புதிய போப்பை தேர்வு செய்யும் செயல்முறை தொடங்கியுள்ளது. வரும் மே 7ம் தேதி புதிய போப்பை தேர்வு செய்ய கார்டினல்கள் ஒன்றுகூட உள்ளனர்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாகக் கடந்த வாரம் உயிரிழந்தார். ஈஸ்டர் தினத்தன்று வீல்சேரில் வந்து மக்களைச் சந்தித்த அவர், அதற்கு மறுநாளே காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் கடந்த சனிக்கிழமை எளிமையாக நடைபெற்றது. இதற்கிடையே போப் பிரான்சிஸுக்கு பிறகு அந்தப் பதவிக்கு யார் வருவார்கள் என்பதைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
பொதுவாகப் புதிய போப்பை தேர்வு செய்ய கார்டினல்கள் அனைவரும் வாடிகன் நகரில் ஒன்று கூடுவார்கள். அதன் பிறகு விவாதம் நடந்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் போப் தேர்வு செய்யப்படுவார். இந்த மாநாடு வரும் மே 7ம் தேதி நடைபெறும் என கார்டினல்கள் அறிவித்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அன்றைய தினம் கத்தோலிக்க கார்டினல்கள் வாடிகன் நகருக்கு வருகை தரவுள்ளனர். கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் போப் ஆகத் தேர்வு செய்யப்படலாம் என்ற போதிலும் பொதுவாக கார்டினல்களில் ஒருவரையே அடுத்த போப் ஆகத் தேர்வு செய்வார்கள்.
மேலும், கார்டினல்களில் எத்தனை பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு கார்டினல் ஏற்கனவே உடல்நலக் காரணங்களுக்காக இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனால் மாநாடு தொடங்கும் போதுதான் எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர் என்பது துல்லியமாகத் தெரிய வரும்.


