
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாஷிம் மூசா உள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மூசா பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைகள் குழு எனப்படும் படையில் பரா கமாண்டோவாக பணியாற்றியவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இது ஒரு புறம் இருக்க இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், திடீர் திருப்பமாக தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாஷிம் மூசா உள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியாகி உள்ள உளவுத்துறை தகவலின் படி, ஹாஷிம் மூசா தற்போது பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஸ்கர் இ தைபா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபராக செயல்பட்டு வந்திருக்கிறார்.
பாகிஸ்தானின் சிறப்பு படை ஹாசிம் மூசாவை லஸ்கர் இ தொய்ஃபா அமைப்புக்கு குத்தகை முறை போல அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள வெளிநாட்டினர், பாதுகாப்பு படையினர், சுற்றுலா பயணிகளை இலக்காக கொண்டு தொடர் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு இடையிலான நெருக்கமான தொடர்பை தெளிவாக நிரூபித்துள்ளது.


