
“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முகாந்திரமே இல்லாத ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடந்திருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பெரியார் பல்கலை. துணை வேந்தர் PUTER ஒரு பவுண்டேஷனை துவங்குகிறார். ஆனால், இதை ஒரு கம்பெனி துவங்கியதைப் போல மக்களுக்குச் சொல்லிவிட்டனர். உண்மையில் அந்தப் பவுண்டேஷன் பெயரே, Periyar University Technology Entreprenurship Research Foundation என்பதுதான். பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும் ஒரு கம்பெனி, அந்தக் கம்பெனியின் லாபத்தை யாரும் வெளியே எடுத்துபோக முடியாது. அந்தக் கம்பெனியின் வளர்ச்சிக்காக மட்டும்தான் அதைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தக் கம்பெனியில் இயக்குநராகப் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், கம்யூட்டர் சயின்ஸ் துறையின் தலைவர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருக்கும் தங்கவேலு, பேராசிரியர் சதீஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ராம்கணேஷ் ஆகியோர் உள்ளனர். பெரியார் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் இயக்குநர்களாக இருக்கும் 4 பேரும் பேராசிரியர்கள்.
இந்த நிறுவனத்தின் நோக்கம் என்னவென்றால், தனியாரிடமிருந்து வரக்கூடிய பணத்தை எடுத்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவது. குறிப்பாக, மாணவர்களுக்குத் தேவையான இண்டஸ்ட்ரீ 4.0 டெக்னாலஜி, மாணவர்களின் ஆற்றல் திறனை அதிகப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்தக் கம்பெனியை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு, பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முதல் தளத்தில் 2000 ச.அடி இடத்தைக் கொடுத்து அங்கு நடந்து வருகிறது. இதில் என்ன தவறு உள்ளது?
இந்தியா முழுவதுமே உள்ள பல்கலைக்கழகங்களில் இது போன்ற கம்பெனிகள் உள்ளன. அந்தக் கம்பெனிகளுக்கு வேறு வேறு இடங்களிலிருந்து பணம் வருகிறது. அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இதில் எந்தத் தவறும் இல்லை.
நியாயமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். லாப நோக்கமில்லாத நிறுவனம். இதைக் காவல் துறையினர், பெரியார் பல்கலைக்கழகத்தின் சொத்துகளைக் கொள்ளையடிப்பது போன்ற அபாண்டமான, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது. இதற்காகக் காவல் துறை தங்களது முகத்தைத் தொங்க வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தளவுக்கு மோசமாக இந்தப் பல்கலைக்கழக விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளனர். துணைவேந்தரிடம் பேசச் சென்றபோது தன்னை சாதிப் பெயர் சொல்லித் திட்டிவிட்டார். எனவே, அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கூறி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புகார் கொடுத்தவர்கள் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது. துணைவேந்தரை சந்திக்கும் வீடியோவில் இருப்பதில் ஒருவர் சக்திவேல். இவர் பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர். இவர் துணைவேந்தரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். ஆனால், அவர் உடன் வந்த இளங்கோ என்பவர்தான், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளார்.
இது முகாந்திரமே இல்லாத ஒரு வழக்கு. ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒருவர், மேலும் ஒரு நபருடன் வந்து துணைவேந்தரின் கார் கதவைப் பிடித்து இழுத்து பிரச்சினை செய்துள்ளனர். இதெல்லாம் எதற்காக நடக்கிறது என்றால், அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடக்கிறது.
பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 5 ஆண்டுகள் பதிவாளர் இல்லாமல் இயங்குகிறது. பொன்முடி ஒருவரை பதிவாளராகப் பணியமர்த்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். அதைத் துணைவேந்தர் ஜெகநாதன் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்போது ஆளுநர், துணைவேந்தரிடம் நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றி பதிவாளரைப் பணியமர்த்த உத்தரவிடுகிறார். இதற்கான கூட்டம் கடந்த 6.11.2023 அன்று நடக்கிறது. அந்தக் கூட்டத்துக்கு உயர் கல்வித் துறை செயலர் கார்த்திக் வரவில்லை. அவருக்குப் பதிலாகத் துணை செயலர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
அப்போது பதிவாளர் பணியிடம்குறித்து பேசும்போது காணொளி வாயிலாக உயர்கல்வித் துறை செயலர் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்குத் துணைவேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்” என்று அண்ணாமலை கூறினார்.

