
தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இலவச மடிக்கணினிகளை மாணவிகளுக்கு அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் கிருஷ்ண மேகலா தலைமை வகித்தார்.இவ்விழாவில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு, நர்சிங் கல்லூரியில் பயிலும் 42 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், வார்டு கவுன்சிலர் யூசுப், மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியபோது, தாராபுரத்தில் உள்ள நான்கு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 624 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மாணவ, மாணவிகளுக்கு வேலை தேடுவதற்கும், உயர் கல்வி பயில்வதற்கும், இணைய வழி பயிற்சிகளில் பங்கேற்பதற்கும் மடிக்கணினிகள் உதவும் என்றும் தெரிவித்தார். கல்வி முன்னேற்றத்திற்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.


