Advertisements

பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக அன்புமணி ராமதாஸின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தேர்தல் ஆணையம் நீதிமன்ற தீர்ப்பும் அன்புமணிக்கு சாதகமாக இருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை துவக்கி இருக்கிறார் பாமகவின் நிறுவனரான ராமதாஸ். இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது போட்டி போட வேண்டும் என்பதற்காக புதிய கட்சியை தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
ராமதாஸின் வலது கரமாக கருதப்படும் அன்பழகனின் மகன் முகிலன் ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் ராமதாஸ் அதில் இணையலாம் என சொல்லப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல், தற்போது முழு அரசியல் பிளவாக மாறி தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக கட்சியின் முகமாக இருந்த டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது அந்த மோதல் வெளிப்படையாகி கட்சியே இரண்டாகப் பிரிந்துள்ள சூழல் உருவாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தற்போதைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸ் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இதனால் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகிய அனைத்திலும் அவருக்கே உரிமை உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் இதே நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. ஆனால் இதனை டாக்டர் ராமதாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. “நான் தான் பாமக நிறுவனர். கட்சியின் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எனக்கே உண்டு” என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் பாமகவுக்குள் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி சேர்ந்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தரப்பில் அன்புமணிக்கு 15 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அன்புமணி தரப்புக்கு அரசியல் ரீதியாக பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், டாக்டர் ராமதாஸ் இதனை எளிதாக விட்டுவிட தயாராக இல்லை என்பதே தற்போதைய அரசியல் கள நிலவரம். பாமகவும் மாம்பழம் சின்னமும் இனி தன் தரப்பிற்கு கிடைக்காது என்ற நிலை உறுதியான பிறகும், அவர் தனது ஆதரவாளர்களை கைவிடாமல் மாற்றுத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் தற்போது பேசப்படும் ‘பிளான்-பி’. அந்த திட்டத்தின் படி, பாமகவை நினைவூட்டும் வகையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க டாக்டர் ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே உள்ள பாமக கொடியைப் போன்றே நிறம், வடிவமைப்பு கொண்ட கொடியில், டாக்டர் ராமதாஸின் முகப் படத்தை மட்டும் சேர்த்து புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததை நினைவூட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், டாக்டர் ராமதாஸ் அணியின் தலைமை நிலைய செயலாளராக உள்ள அன்பழகனின் மகன் முகிலனை தலைவராக கொண்டு ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அன்பழகன், நீண்ட காலமாக டாக்டர் ராமதாஸின் வலது கரமாக செயல்பட்டு வந்தவர் என்பதால், அவரது மகன் பெயரில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய கட்சி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் டாக்டர் ராமதாஸ் தனது தீவிர ஆதரவாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேரை களத்தில் இறக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம், அன்புமணி-அதிமுக கூட்டணிக்கு நேரடியாக சவால் விடும் வகையில், அதே வன்னியர் வாக்குகளை பிரிக்கும் அரசியல் நகர்வு இது என ராமாதாஸின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஒரே சமூக வாக்குகளை நம்பியிருந்த பாமக அரசியல், இப்போது இரு அணிகளாகப் பிரிந்து போட்டியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த பிளவு, அதிமுக கூட்டணிக்கு பலமாக மாறுமா அல்லது குடைச்சலாக மாறுமா என்பது வரவிருக்கும் தேர்தலில் தான் தெளிவாக தெரியவரும். அதே நேரத்தில் அதிமுக – பாஜக உடன் அன்புமணி கூட்டணி வைத்திருப்பதால் மத்திய அரசின் சப்போர்ட் முழுமையாக உள்ளது. இதனால் அய்யா பாமகவால் எந்த பலனும் இல்லை என்கின்றனர் அன்புமணி தரப்பினர்.
Advertisements


