
பாமக தலைவர் அன்புமணிக்கே மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு விளக்கம் அளித்து உள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணி க்கும் இடையே அதிகாரமாதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார்.
தொடர்ந்து ராமதாஸ் பாமக தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.இது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பாமக கட்சி மற்றும் சின்னத்திற்கு எந்தவித உரிமையும் கேட்க கூடாது என்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாமக வழக்கறிஞர் கே.பாலு விளக்கம் அளித்து உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்பது நிறுவனர் ராமதாஸ் தலைமையில் உள்ள கட்சி தான். செய்தியாளர்களும் ஊடகத்தினரும் இருவரையும் இரு அணிகளாக பிரித்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருக்கக்கூடியவர்கள் தான் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்றும் இதனைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் அன்புமணி ராமதாஸ் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தச் சமயத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால் பாமக கட்சி நிர்வாகிகள் 100% பேர் அன்புமணியின் தலைமையை ஏற்றும், அவர் மீது நம்பிக்கை வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாமக வழக்கறிஞர் கே.பாலு பாமகவில் இருக்கக்கூடிய அனைவரும் வாருங்கள் மீண்டும் ஒன்றிணைவோம். பல்வேறு சோதனைகளைச் சந்தித்தோம். பல்வேறு தியாகங்களைச் செய்தோம். எதிர்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க கூடிய ஒரு நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் நீங்கள் எல்லாம் அன்புமணி ராமதாஸ் தலைமை மீது நம்பிக்கை வைத்து இதுவரை சற்று பிரிந்து இருக்கக்கூடியவர்கள், ஒதுங்கி இருக்கக் கூடியவர்கள் அழைக்கின்றோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஓர் அசைக்க முடியாத இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பாலு கட்சி வலிமை பெற அன்புமணி ராமதாஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் பாமகவை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அன்புமணி ராமதாஸ் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
குறிப்பாக அன்புமணியின் தன்னுடைய நடைப் பயணத்தின் பொழுது திமுக செய்த ஊழல்கள் மற்றும் குற்றங்களை பொதுமக்களிடம் நேரில் சந்தித்து எடுத்துக் கூறி வருகிறார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களும் அன்புமணி ராமதாஸ் செயல்பாடுகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பாமக இவரால் தான் நிலைநிறுத்த முடியும் அன்பு மணியால் தான் கட்சி நடத்த முடியும் என்ற பொது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரித்து உள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் உரிய சலுகைகள் மற்றும் உரிமைகள் குறித்தும், பாமக 15 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் அன்புமணியின் போராட்டம் இருக்கும் என்று தெரிவித்து வழக்கறிஞர் கே. பாலு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்றுமே ராமதாஸ் தான் என்றும் குறிப்பிட்டார்.


