4ஜி இணையச் சேவையை Bsnl வழங்குவது நமது நாட்டுக்கே பெருமை – பிரதமர் மோடி !

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தி 4ஜி இணையச் சேவையை பிஎஸ்என்எல் வழங்குவது நமது நாட்டுக்கே பெருமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் ஜர்சுகுடாவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த மாநில ஆளுநர் அரிபாபு கம்பம்பதி, முதலமைச்சர் மோகன்சரண் மாஜி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.
தொலைத்தொடர்பு, ரயில்வே, உயர்கல்வி, நலவாழ்வு, திறன்மேம்பாடு, ஊரக வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நிறைவுற்ற திட்டங்களைத் தொடக்கியும் வைத்தார். 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்நாட்டுக் கருவிகளைக் கொண்டு எல்லைப்புறப் பகுதிகள், நக்சல் இயக்கப் பாதிப்புள்ள பகுதிகள், தொலைவுப் பகுதிகள் உள்ளிட்ட 97 ஆயிரத்து 500 இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி இணையச் சேவையை அளிப்பதைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
ஒடிசா, ஆந்திரம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், அசாம், குஜராத், பீகார் ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் இந்த விழாவில் காணொலி மூலம் பங்கேற்றனர். அந்த மாநிலங்களில் பிஎஸ்என்எல் 4ஜி இணையச் சேவையைப் பிரதமர் காணொலியில் தொடக்கி வைத்தார்.
ஒடிசாவின் பெர்காம்பூர், குஜராத்தின் சூரத்தில் உள்ள உத்னா நிலையங்கள் இடையான அமிர்பாரத் விரைவு ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவில் இரண்டு செமிகண்டக்டர் ஆலைகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஒரு செமிகண்டக்டர் பூங்கா ஒடிசாவில் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார வலிமை பெற விரும்பும் நாடு கப்பல்கட்டுவதில் அக்கறை காட்ட வேண்டும் என்றும், கப்பல் கட்டும் திட்டத்துக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்குத் தமது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன்மூலம் நாலரை இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு ஈர்க்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தி 4ஜி இணையச் சேவையை பிஎஸ்என்எல் வழங்குவது நமது நாட்டுக்கே பெருமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *