
கரூரில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மேற்கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்தனர். நெரிசலில் பாதிக்கப்பட்ட மேலும் 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், அந்த ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து இந்த ஆண்டில் மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார். இதையடுத்துத் திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ஆடம்பர சொகுசுப் பேருந்தில் நின்றபடி சாலையில் வீதியுலா சென்றுகொண்டு பரப்புரை செய்துவந்தார். அவர் சென்ற ஒவ்வொரு இடத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டத்தை நடத்தத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனுமதி கோருவதும் பெறுவதுமாக இருந்தது. இந்நிலையில் நேற்று நாமக்கல்லிலும் விஜயின் பரப்புரை வீதியுலா நடைபெற்றது. தவெக தொண்டர்களும் விஜயைப் பார்க்க வந்த பொதுமக்களும் நால்வழிச்சாலையில் பேரணியாகச் சென்றனர்.
அதன்பின் நேற்றிரவு கரூரில் விஜயின் பரப்புரை நடைபெற்றது. மிகக் குறுகலான இடத்தில் ஏராளமானோர் கூடியதால் நெரிசலில் சிக்கிப் பலர் மயக்கமடைந்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்கள், மிதிபட்டவர்களை அங்கிருந்தோர் மீட்டுக் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கெனவே உயிரிழந்தோர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தோர் என இன்று காலை வரை மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக மருத்துவக் கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.
மேலும் 52 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறினார். இன்று நண்பகலுக்குள் உடற்கூறாய்வு முடிந்து விடும் என்றும், அதன்பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் உள்ளத்தை உருக்குவதாக அமைந்திருந்தது.
அரசியல் கட்சித் தலைவரின் கூட்டத்துக்குச் சென்று நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் சூழல் தமிழ்நாட்டில் இன்னும் நிலவுவது விடுதலை பெற்று முக்கால் நூற்றாண்டு ஆனபின்னும் மக்களாட்சிக்கு நம் மக்கள் இன்னும் பழக்கப்படாததையே காட்டுவதாக அரசியல் நோக்கர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.


