
தொட்டால் குத்தமடா, தொடாமல் விட்டுவிட்டால் துக்கமடா. மதுவால் ஒருவன் மயானம் சென்றானடா, காரணம் காவல்துறை தானடா என்று அருணாச்சலமும், அவரது பெற்றோரும் அளித்திருக்கும் பகீர் வாக்குமூலம் தூத்துக்குடியில் மட்டுமல்ல, தமிழகத்தையே ஒரு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பால்போன மதுவால் பாமர ஏழை குடிகாரனுக்கு பாதியிலே பால் ஊற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. காரணம், துக்கத்தை துடைக்க துணைவி இருக்க, பக்கத்தில் ஊறுகாயை தேடுகிறான். தன் வயிற்றுப் பிழைப்பிற்கு எத்தனையோ தொழில் இருக்க, அருணாச்சலம் என்பவர் தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு திடீரென உயிரிழந்தார். சம்பவத்தின் விரிவாகப் பார்க்கலாம்.
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது 24 வயதான மகன் அருணாச்சலம். இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தமிழக அரசே சட்டவிரோதமாக மதுவை விற்று பிழைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில், கடந்த 18-ந்தேதி சட்டவிரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றதன் பேரில் தர்ம அடி கொடுத்தார்களோ அல்லது என்ன செய்தார்களோ தெரியவில்லை. பாவம் இளம் உயிர்.
அருணாச்சலம் திடீரென அங்கேயே கரகரவென சுருண்டு மயங்கி விழுந்தார். விசாரணை என்ற பெயரில் அடியும் கொடுத்துவிட்டு, உற்ற சமயத்தில் உதவும் நண்பன் போல் அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் உள்ளனர் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.
சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தலையில் சரமாரியாக தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அருணாச்சலத்தின் நண்பர்கள் தன் நண்பனுக்கு நீதி கேட்டு உலகையே உள்ளங்கையில் அடக்கும் கைபேசியில் உள்ள சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு பரிதாபமாக உயிரிழந்து சென்றார்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் இதனை தாங்கிக்கொள்ளாத அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர். அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆகியோர் தங்களது ரத்தம் கொதித்துப்போய் தூத்துக்குடி-நெல்லை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் அருணாச்சலத்தின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி-நெல்லை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்பாவி இளைஞனை போட்டுத்தள்ளிவிட்டு போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உலக மகா நடிப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதுபோன்று தூத்துக்குடியில் காவல்துறையினரால் அரங்கேறிய ஏராளமான சம்பவங்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கையில், மேலும் எண்ணெய்யை ஊற்றி காவல்துறை பற்ற வைத்திருக்கும் இத்தகைய சம்பவம் அனைவரையும் கொந்தளிக்கச் செய்திருக்கிறது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் போலீசார் தந்தை-மகனை தாக்கியதில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு உலகையே அசர, யார் இவர்கள் என்று அசரவைக்கும் வகையிலும், நம்பக்கூடிய வகையிலும் காவல்துறை அளித்த விளக்கம் என்னவென்றால்,
விசாரணையின்போது அருணாச்சலம் மயங்கி விழுந்ததாகவும், அவரது தலையில் ஏற்கனவே கட்டி இருந்ததாகவும் காவல்துறை ஒரு பிரயோஜனமும் இல்லாத புழுதியை பரப்பிவிட்டிருக்கிறது. மேலும், இது லாக்-அப் மரணம் அல்ல என்றும் ஆணித்தனமாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, சட்டத்தை தன் கையில் வைத்திருக்கும் காவல்துறை தான் நினைத்தவற்றையெல்லாம் ஏடுகளில் பதிந்துவிடலாம் என்று கூறியிருக்கும் இத்தகைய தகவல் அருணாச்சலத்தின் பெற்றோருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆனால் இறைவன் போடும் மனக்கணக்கு ஏடுகளில் இருந்து எவனாலும் தப்பிக்க முடியாது என்பதை சட்டத்தின் மூலம் இறைவன் தப்பு யார் பக்கம் உள்ளது என்பதை கற்பிப்பான் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



