
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மாலைவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகள் முழுவதும் மழை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாகச் சென்னை விமான நிலை யத்தில் உள்ள ஓடுபாதைகளில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் இன்று (1-ந்தேதி) அதிகாலை 4 மணிவரை விமானநிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.பின்னர் விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் மழையும் இல்லாததால் 3 மணி நேரம் முன்னதாகவே நள்ளிரவு 1 மணிக்கு விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
இதனிடையே ஃபெஞ்சல் புயல் அச்சுறுத்தலின்போது நேற்று சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஓடுபாதையில் இறங்க முயன்ற விமானம் தடுமாறியது. உடனே சுதாரித்து கொண்ட விமானி விமானத்தைத் தரையிறக்கம் மேலே எழுப்பிப் பறக்க வைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.




