
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னையில் இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19- ஆம் தேதி தில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசினார். இதன் பின்னர், தில்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சட்டமன்ற தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு 4 நாட்களில் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று காலை 10 மணிக்கு சென்னை வருகிறார். இதன் பின்னர், அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்நிகழ்வில், கூட்டணிகட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
அ.தி.மு.க. தரப்பில் பாஜகவிற்கு 27 இடங்கள் வரை ஒதுக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிமுகவுடன் மேற்கொள்ளப்படவுள்ள தொகுதிப் பங்கீடு, அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


