
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி அவர்கள் மறைவிற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்த தகவலை அறிந்த நடிகர் அஜித், உடனடியாக சென்னைக்கு புறப்பட்டார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையாரின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திப்பதாகக் கூறினார். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்ததாகத் தெரிவித்தார். அன்னையினை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் தேற்ற தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்று கூறினார். அஜித்குமாரின் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றதாகத் தெரிவித்தார். பாசமிகு தாயாரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.




