
பீகாரில் மீண்டும் பாஜ கூட்டணிக்கு திரும்ப நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அவர், இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
பாட்னா: மக்களவை தேர்தலில் 28 கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. அதுவரை காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்த ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. கூட்டணியில் கட்சிகளை ஒருங்கிணைக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பெரும் பங்காற்றினார். இந்நிலையில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு விவகாரத்தில் மேற்குவங்க திரிணாமுல் காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே முடிவு எட்டப்படாததால், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இதேபோல் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், மக்களவை தேர்தலை தனித்து சந்திப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பீகாரிலும் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் நிதிஷ் குமார் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 242 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 19 இடங்களிலும் வென்றது.
அதேபோல பாஜ 78 இடங்களில் வென்றது. அதாவது ஆட்சி அமைக்க தேவையான 122 இடங்களை யாரும் வெல்லவில்லை. எனவே பாஜவுடன் சேர்ந்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்த ஆட்சி 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜ கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த நிதிஷ்குமார், தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். அது மட்டுமல்லாது, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக தேர்வானார்.
இந்நிலையில், இந்த கூட்டணிக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்க நிதிஷ் குமார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அதை சாத்தியமாக்கினார். இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கூட அவர் நிறுத்தப்படலாம் என்று பேச்சுள் எழுந்தன. இப்படி இருக்கையில்தான் காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் பாஜ கூட்டணியில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டுமல்லாது பாஜ-ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் நடப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இன்று அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணிக்கு இது மேலும் சிக்கலை உருவாக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


