அமைதியோ அமைதியில் இபிஎஸ்? அமைச்சர் ரகுபதி!

Advertisements

சென்னை:

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் தள பக்கத்தில் ‘எங்கே பழனிசாமி?’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பாராளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள்.

சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்குத் துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார்.

ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்கக் கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல்பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாகப் பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் “வலிக்காமல் வலியுறுத்த” கூட மனம் இல்லாமல் அமைதி….அமைதியோ அமைதியென ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.

யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கிக் கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்குத் தெரியுமா என்று.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *