இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு அமமுக பாடுபடும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் திரைப்படங்களில் கதாநாயகனாக தோன்றினாலும், நிஜத்தில் அவர் ஒரு வில்லன் தான் என்று தெரிவித்தார். மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்ல யோசனை என்று கூறினார். எனவே, தற்போதைய சூழலில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு அமமுக பாடுபடும் என்று தெரிவித்தார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய மற்றும் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடிய பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார். இதனால், தமிழக முதலமைச்சரின் வீட்டிற்கு அருகிலேயே சட்டமன்றத்தைக் கொண்டுவரத் திட்டமிடுகிறார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்துள்ளார்.

